பிரேக் பிடிக்காததால் மலைச்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி நின்ற பஸ்ஸால்,
பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தேனி மாவட்ட எல்லை குமுளியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ், குமுளி லோயர் கேம்ப் மலைச்சாலையில் அப்படியே பிடிக்காமல் மலைச்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி நின்றதால் பஸ்ஸில் இருந்த 25 பேர் உயிர் தப்பினர்.
தேனி மாவட்ட எல்லை குமுளியிலிருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று கிளம்பி சென்றது. 23 பயணிகளுடன் சென்ற இந்த பஸ்ஸில் தேனியைச் சேர்ந்த பாண்டி சுந்தரம் ஓட்டுனராகவும், நிலக்கோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் நடத்துனராகவும் இருந்தனர்.
பஸ் குமுளி மலைச்சாலையில் மாதா கோயில் மேல் வளைவில் வரும்பொழுது பஸ் பிரேக் பிடிக்கவில்லை. இதை அடுத்து பஸ் டிரைவர் சமயோசிதமாக யோசித்து, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் பென் ஸ்டாக் பைப் (ராட்சச குழாய்) செல்லும் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பஸ்சை நிறுத்தினார்.

மலைச்சாலை இறக்கத்தில் பஸ் வந்த வேகத்தில் பாலத்தின் வலது பக்க சுவற்றில் மோதி இருந்தால் ராட்சத பள்ளத்தில் விழுந்து, மிகப்பெரிய விபத்தும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும். டிரைவரின் திறமையால் பஸ் தடுப்புச் சுவரில் மோதி நிறுத்தப்பட்டதால் பஸ்ஸில் வந்த பயணிகள் உட்பட 25 பேரும் உயிர்தப்பினர்.
பாலத்தில் மோதி பஸ் பாலத்தின் குறுக்காக திரும்பி நின்றதால், வேறு வாகனங்கள் எதுவும் காலத்தை கடந்து குமுளிக்கோ அல்லது குமுளியிலிருந்து கம்பம், தேனி பகுதிக்கோ செல்ல முடியாதவாறு போக்குவரத்து தடை ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த லோயர் கேம்ப் போலீசாரும், போக்குவரத்து ஊழியர்களும் சென்று விபத்தில் சிக்கிய பஸ்ஸை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு பஸ் மீட்கப்பட்டது. இதை அடுத்து குமுளி மலைச்சாலையில் போக்குவரத்து சீரானது.
