• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னை விமான நிலையத்தில், விமான பயணிகள் தவிப்பு…

ByPrabhu Sekar

Apr 15, 2025

சென்னை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை, செல்லும் 2 ஏர் இந்தியா விமானங்கள், சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், திடீர் இயந்திர கோளாறு காரணமாக, 500 -க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான பயணிகள், சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக, சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11.20 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானம், டெல்லிக்கு புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 172 பயணிகள் பயணிக்க இருந்தனர். அந்த விமானம் வழக்கமாக, காலை 10.35 மணிக்கு, டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் 11.20 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லும்.

அதைப்போல் டெல்லியில் இருந்து வரவேண்டிய விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 10.34 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கியது. இதை அடுத்து டெல்லி செல்ல வேண்டிய, 172 பயணிகளும், ஏர் இந்தியா விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை விமானி சரி பார்க்கும்போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தார். இதை அடுத்து, விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமானப் பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, விமானத்தை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதை அடுத்து பயணிகள் 172 பேரும், விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் உடனடியாக பழுது பார்க்க முடியாததால், சுமார் நான்கரை மணி நேரம் தாமதமாக, இன்று மாலை 4 மணிக்கு மேல், சென்னையில் இருந்து டெல்லிக்கு, புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி செல்ல வேண்டிய 172 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானம், காலை 10.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, அந்த விமானம், மீண்டும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, மும்பைக்கு காலை 11.40 மணிக்கு, புறப்பட்டு செல்லும். ஆனால் சிங்கப்பூரில் இருந்து 184 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, அந்த விமானம் இன்று மாலை 5.30 மணிக்கு, சென்னை வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து சென்னையில் இருந்து இன்று காலை 11.40 மணிக்கு, 167 பயணிகளுடன், மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக, இன்று மாலை 5.40 மணிக்கு மேல், சென்னையில் இருந்து மும்பை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை செல்ல வேண்டிய 167 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

அதைப்போல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இயந்திர கோளாறு காரணமாக சுமார் 6 மணி நேரத்திற்கு மேல், தாமதமாக சென்னைக்கு வருவதால், சிங்கப்பூர்- சென்னை பயணிகள் 184 பேர், விமானத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சிங்கப்பூர், டெல்லி, மும்பை ஆகிய 3 ஏர் இந்தியா விமானங்கள், இயந்திர கோளாறு காரணமாக, பல மணி நேரம் தாமதம் ஆகி, 500 -க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.