பிரதமர் நரேந்திர மோடியை மாற்றி விட்டு புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ரகசிய ஆலோசனை நடைபெற்றதாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி கூறிய கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜகவில் 75 வயது நிறைவடைந்தால், அவர்களுக்கு பதவி வழங்கப்படுவதில்லை. அதன்படி எல்.கே.அத்வானி எடியூரப்பா உள்பட பலர் இப்படி பதவி வாய்ப்பை இழந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டு 75 வயது நிரம்ப உள்ள பிரதமர் நரேந்திரமோடி பதவியில் இருப்பாரா என்ற கேள்வியும், அவருக்குப் பதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் ஆவார் என்ற தகவலும் தொடர்ந்து பரவி வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி செய்தியாளர்களிடம் கூறிய கருத்து தேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில், ” மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். தான் பதவியில் இருந்து விலகும் முடிவை தெரிவிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு மோடி சென்றார். அவரின் ஓய்வுக்குப் பின் புதிய பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தினர். மோடிக்குப் பதிலாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று கூறினார்.
ஆனால், மோடி பதவி விலகுவார் என்ற தகவலை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2029-ம் ஆண்டிலும் பிரதமர் தான் மோடி என்று அவர் கூறியுள்ளார். ஆனால், சஞ்சய் ராவத் எம்.பியின் சர்ச்சை கருத்தால் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.