தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் சிஐஐ தென்னிந்திய மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் தொழில்துறை, பொருளாதாரம் உயர சிஐஐ ஆற்றும் பணியைப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசும், இந்திய தொழிற் கூட்டமைப்புகளும் பல ஆண்டுகளாக இணைந்து செயல்படுகிறது.
தமிழ்நாடு இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல், தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இதனால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன. மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் தனித்துவமாக காணப்படுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே இலக்கு.
தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சியை அரசு ஏற்படுத்தி வருகிறது. சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்ற 3-வது செயல் திட்டம் உருவாக்கி வருகிறோம். பசுமைப் பொருளாதார துறையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீர்வளங்களை திறம்பட நிர்வகித்தல், நீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறோம். கோவை, திருச்சி, ஒசூர் போன்ற மாவட்டங்கள் பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் அளவிற்கு மின்சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 12.11 சதவீதம் பங்களிப்பு செய்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு 8 சதவீதத்துக்கும் மேல் பொருளாதார வளர்ச்சி அடைந்து, இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.