ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் அதிரடியாக அரைசதம் விளாசியதன் விளைவாக அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2025 சீசனின் 7வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று இரவு விளையாடின. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 47 ரன்களும், கிளாஸன் 17 பந்துகளில் 26 ரன்களும், நிதிஷ் 32 ரன்களும், அனிகேத் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 191 ரன்கள் என்ற இலக்குடன் இறங்கிய லக்னோ அணியின் ஓப்பனிங் வீரர்களான மிச்செல் மார்ஷ், அரை சதம் கடந்து அசத்தினார். எய்டன் மார்க்ரம் ஒரே ரன்னில் பேட் கம்மின்ஸுக்கு கேட்ச் கொடுத்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்து இறங்கிய நிக்கோலஸ் பூரன் 26 ரன்களில் 6 பவுண்டரி, 6 சிக்சர்களைப் பறக்கவிட்டு 70 ரன்களை குவித்தார். அந்த அணி 16 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 20 அல்லது அதற்கும் குறைவான பந்துகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார். இதுவரை ஐபிஎல் தொடரில் நான்கு முறை 20-க்கும் குறைவான பந்துகளில் நிக்கோலஸ் பூரன் அரை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.