மதுரை மாவட்டம் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், வாடிப்பட்டி வருவாய் வட்ட அளவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஒரு நாள் வருவாய் வட்டம் அளவில் தங்கி, பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உங்களைத் தேடி. உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒரு நாள் வருவாய் வட்டம் அளவில் தங்கி திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு அறிவிக்கப்படும். அதன்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, வாடிப்பட்டி வட்டத்தில் அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
குறிப்பாக கச்சைகட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வருகை புரிந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் உரிய முறையில் மருத்துவப் பணியாளர்களால் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, இரும்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்து, பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, பள்ளியின் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும் இரும்பாடி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளி மூலம் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ததோடு, விரும்பாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நூலகத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து, ஆதனூர் கிராமத்தில் வேளாண் வணிகத்துறை சார்பாக, ஒற்றை சாளர தகவல் மற்றும் நுண்ணறிவு மையத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். திறப்பு விழா முடிந்து சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தின் அங்கமாக மர நடு விழா நடைப்பெற்றது. விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அதன் பின்பு அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்பு, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.