• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா- பிரதமர் மோடி ஏப்.6-ல் தமிழகம் வருகை!

ByP.Kavitha Kumar

Mar 26, 2025

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ந்தேதி தமிழகம் வருகிறார்.

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. கடலுக்கு நடுவில் உள்ள இந்த பாலத்தில் 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த பாலம் கட்டி 110 ஆண்டுகளாகி விட்டது. கடல் அரிப்பின் காரணமாக இந்த பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்திற்கு பயன்படும் தூக்குப்பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. எனவே, பயணிகள் பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022 டிசம்பர் 22-ம் தேதியுடன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. இந்த பாலம் 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வந்தது. இந்த புதிய ரயில் பாலத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்து சில குறைகளைச் சுட்டிக்காட்டினார். அந்த குறைகள் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. பின்னர், பிப்ரவரி மாதத்தில் இந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பாலப்பணிகள் முடிந்து மூன்று மாதங்களாகியும் திறந்து வைக்கப்படாமல் இருந்தது.

கடந்த 23-ம் தேதி தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசல் கிஷோர் தலைமையில் உயர் அதிகாரிகள் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார்.

பாம்பன் ரயில்வே பாலம் திறப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர். பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.