ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு 5வது போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்து வீச முடிவு செய்தார்.
பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட் செய்ய வந்தார். இருவரும் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்நிலையில் பிரியான்ஷ், 23 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பேட் செய்ய வந்த அஸ்மதுல்லா 16, மேக்ஸ்வெல் 0, ஸ்டாய்னிஸ் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஷஷாங் சிங் ஸ்ரேயாஸ்சுடன் இணைந்து குஜராத் பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஸ்ரேயாஸ், 42 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களுடன் 97 ரன்களை விளாசினார். ஷஷாங், 16 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் சாய் கிஷோர் 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 244 என்ற இலக்குடன் இறங்கிய குஜராத் அணியின் சாய் சுதர்சன் 41 பந்துகளில் 74 ரன்களை விளாசினார். கில் 33 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஜாஸ் பட்லர் 54 ரன்கள் எடுத்தார். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 46 ரன்கள் எடுத்தார்.
இதனால் குஜராத் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராகுல் 6, ஷாருக்கான் 6, அர்ஷத் கான்1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால் 20 ஓவர்களில் 232 ரன்களுக்குள் குஜராத் அணி சுருண்டது. இதனால் பஞ்சாப் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.