பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 புதிய வீடுகள் கட்டுவதற்கு ரூ.6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. பயனாளிகளின் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்தார்.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுள்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் “நிறைந்தது மனம்“ என்ற திட்டத்தின் கீழ் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, வீடற்ற நிலையில் இருந்த தங்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் வீடுகள் வழங்கியதற்காக அரசிற்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வகையில், வீடற்ற மற்றும் குடிசைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு தலா ரூ.3.50லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டும் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களிலும் தகுதிவாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கலைஞரின் கனவு இல்லம் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 186 வீடுகள் கட்ட ரூ. ரூ.6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அதேபோல பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு வீடு ரூ.2.70 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 88 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இத்திட்டத்தில் பயனடைந்த காமாட்சி க/பெ ராஜேந்திரன் என்பவர் தெரிவிக்கையில்,
நாங்கள் கவுள்பாளையம் ஊராட்சியில் வசித்து வருகின்றோம். இங்கு என் கணவர் கல் உடைக்கும் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். வீடற்ற நிலையில் இருந்த நாங்கள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கேட்டு விண்ணப்பித்தோம். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து, எங்களுக்கு வீடில்லை என்பதை உறுதி செய்துவிட்டு, புதிய வீடு கட்ட ஆணை வழங்கினார்கள்.
தற்போது எங்களுக்கான சொந்த வீடு கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. எங்களின் வாழ்நாள் கனவு இன்று நினைவாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்றார். இந்நிகழ்வின்போது பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.செல்வமணி, பூங்கொடி, வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.