“குன்றக்குறவர்கள் வாயிலாக கேட்டறிந்த சேரன் செங்குட்டுவன், கண்ணகி வந்து நின்ற இடத்தில் அவருக்கு கோவில் எழுப்ப முடிவு செய்து இமயத்திலிருந்து கல் கொண்டுவந்து கோவில் கட்டினான். அதுதான் கண்ணகி கோவில்” என்ற தகவல் தான் ஹைலைட்டான விஷயமே!!!
கண்ணகிக்கு இந்தியாவில் ஏன் வேறு கோயில்கள் கட்டப்படவில்லை?
தேனிமாவட்டம் கூடலூருக்கு தெற்கே உள்ள விண்ணேற்றிப் பாறை (தற்போது வண்ணாத்திப்பாறை)யில், தமிழக கேரள எல்லைப்பகுதியான, மங்கலதேவி மலையில் புலிகள் சரணாலயப்பகுதியில் 4830 அடி உயரத்தில் உள்ளது கண்ணகி கோவில் (கோட்டம்). மங்கலதேவி கண்ணகி அம்மனுக்கு இக்கோவிலை தவிர இந்தியாவில் வேறு எங்கும் கோவில்கள் இல்லை. வேறு எங்கும் ஏன் கோவில்கள் கட்டப்படவில்லை? கண்ணகி கோவில் உருவானது எப்படி? இந்தக் கண்ணகி கோவிலை வனப்பகுதியில் கண்டுபிடித்தவர் யார்? கடச்சனேந்தல் கிராமத்திற்கும் கண்ணகிக்கும் என்ன தொடர்பு?

கோவில் உருவான வரலாறு…
மதுரை மாநகரை எரித்த கண்ணகி, வைகை ஆற்றின் தென்கரை வழியாக பதினான்காம்நாளில் விண்ணேத்திப்பாறை வந்தடைந்தாள். அங்கிருந்த குன்ற குறவர்களிடம் தன் கதையை கூறிக் கொண்டிருந்தபோது, விண்ணிலிருந்து பூபல்லக்கில் தேவர்களுடன் வந்த கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து விண்ணுலகம் அழைத்துச்சென்றான். இச்செய்தியை குன்றக்குறவர்கள் வாயிலாக கேட்டறிந்த சேரன் செங்குட்டுவன், கண்ணகி வந்து நின்ற இடத்தில் அவருக்கு கோவில் எழுப்ப முடிவு செய்து இமயத்திலிருந்து கல் கொண்டுவந்து கோவில் கட்டினான். அதுதான் கண்ணகி கோவில். இரண்டாயிரம் ஆண்டு பழமையும், சரித்திரப்புகழும் வாய்ந்த கண்ணகி கோவில், தேனிமாவட்டம் கூடலூருக்கு தெற்கே உள்ள வண்ணாத்திப் பாறையில், தமிழக கேரள எல்லைப்பகுதியான, மங்கலதேவி மலையில் புலிகள் சரணாலயப்பகுதியில் 4830 அடி உயரத்தில் உள்ளது.
சேரன் செங்குட்டுவன் கட்டிய இக்கோவில் சிதிலமடைந்ததால், பின்னாளில் சோழப்பேரரசன் முதலாம் இராஜராஜன் தன்ஆட்சிகாலத்தில் (கி.பி. 985-1014) சோழர் கலைப்பாணியில் இக்கோவிலை மீட்டமைத்தான். இப்போது உள்ள தோற்றம் அதுவே….
கண்ணகி கோட்டத்தை கண்டுபிடித்தவர்…

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின்,கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர் ஆய்வறிஞர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள். சிலப்பதிகாரத்தைத் திறம்பட கற்று அதில் ஊறித் திளைத்தவர். 1945 ம் ஆண்டு மயிலாடுதுறை அருகில் கடற்கரையில், மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன் மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் செடிகளும் செறிந்த புதர்களும், சவுக்கு தோப்புகளும், புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று, அன்று அழைக்கப்பட்ட பகுதியே,பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார். கடலடி ஆய்வு செய்து கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப்பரப்பே, காவேரிப் பூம்பட்டிணம்… கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார். இதை அடுத்து சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த பாதை வழியாகவே ஒரு பயணம் செய்தால் என்ன? இன்று தன் ஆய்வை தொடர்ந்தார். கண்ணகி பயணித்த பாதை வழியாகவே நடந்து சென்றார். சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நகரத் தொடங்கி 1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கோயிலைக் கண்டுபிடித்து, சிலப்பதிகாரம் கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதை உலகிற்கு உணர்த்தினார்.
கண்ணகிக்கு ஏன் வேறு எங்கும் கோவில்கள் இல்லை?
சேர மன்னர் செங்குட்டுவனால் கட்டப்பட்டது மட்டுமே கண்ணகி கோயில் ஆகும். இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின் பூம்புகாரில் இருந்து கண்ணகியின் வயது முதிர்ந்த பெற்றோர்கள் கண்ணகி கோட்டம் வந்து கண்ணகி அம்மனை வழிபட்டு, தாங்கள் மிகவும் சிரமப்பட்டு இவ்விடத்தை அடைந்ததாகவும், தினமும் உன்னை காண விரும்புகின்றோம். ஆதலால் நீ எங்களுக்காக பூம்புகார்- க்கு வரவேண்டும் என்று வேண்டினார்கள். அப்பொழுது மங்கலதேவி கண்ணகி அம்மன், எனக்கு இந்த மலையானது மிகவும் பிடித்த இடமாகும். இந்த இடத்தை விட்டு நான் எப்போதும் வரமாட்டேன் என்னை நீங்கள் காண வேண்டுமென்றாலும் உங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமானாலும் உங்களின் வேண்டுதல்கள் நிறைவேற்ற என்னை நீங்கள் இங்கு வந்து தான் காண வேண்டும் என, ” வென்வேலன் குன்றில் விளையாட்டு யான் அகலேன் எனக் கூறியதாக சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளார் அவர்களால் கூறப்பட்டு உள்ளது.
கண்ணகி தெய்வத்தின் வாக்கின்படி, அதன் பின்னர் மங்கலதேவி கண்ணகி அம்மனுக்காக இதுவரை எங்கும் கோயில்கள் கட்டப்படவில்லை. இந்தியாவில் கண்ணகிக்காக இருக்கின்ற ஒரே கோயில் மங்கலதேவி கண்ணகி கோட்டத்தில் அமைந்துள்ள கண்ணகி கோவிலே ஆகும்.

ஆனால் இலங்கை மன்னர் கயவாகு கண்ணகி கோயில் கும்பாபிஷேகத்தின் பொழுது வருகை தந்திருந்தார். அப்பொழுது கடல் கடந்து வந்து நாங்கள் உன்னை வணங்க வேண்டும். இந்த மலைக்கு வருவதற்கு மிகவும் சிரமமாகும். எனவே நாங்கள் உன்னை வணங்க வேண்டும், உனக்காக நாங்கள் இலங்கையில் கோயில் கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார். அதற்கு மங்கலதேவி கண்ணகி அம்மன் ” தந்தேன் வரம் ” எனக் கூறி இலங்கையில் கோயில் கட்டுவதற்கு அருள் ஆசி வழங்கினார். அதன் பின்னரே கண்ணகிக்காக இலங்கையில் பல்வேறு இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டது. கண்ணகி அம்மனின் உத்தரவு இல்லாமல் கண்ணகிக்காக யாரும் கோயில் கட்டக்கூடாது என்ற காரணத்தினால் தமிழகத்தில் எங்கேயுமே கண்ணகிக்காக தனி கோயில்கள் இல்லை, கண்ணகி அம்மனை வழிபட நினைத்த பக்தர்கள் கண்ணகி கோயிலில்
பிடிமண்ணை எடுத்துச் சென்று தாங்கள் விரும்பும் இடங்களுக்கு கொண்டு சென்று அந்த இடங்களில் கண்ணகியின் மாற்றுப் பெயர்களான பகவதி அம்மன், துர்க்கை அம்மன், மாரியம்மன் என்ற பெயர்களில் கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்கள். இவை யாவும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் அவர்களால் சொல்லப்பட்ட காரணம் ஆகும்.
கோவிலை கண்டுபிடித்தது எப்படி?
கண்ணகி கோட்டத்தைக் கண்டுபிடித்தது குறித்து பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில், சிலப்பதிகாரத்தை முழுமையாகப் படித்தேன். அதில் எல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரில் இருந்து கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதையாக அதில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் நடந்தே சென்றேன். மதுரையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு அது கிடைக்காததால் நகரை எரித்துவிட்டு தலைவிரி கோலமாய் மேற்கு நோக்கிச் செல்கிறாள். சேர நாட்டின் மலைப் பகுதியான முருகவேல் குன்றத்துக்கு (இன்றைய மங்களதேவி மலை) சென்று அங்கு வானுலகில் இருந்து ரதத்தில் வந்திறங்கிய கோவலனுடன் இணைந்து கண்ணகி விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கண்ணகி நடந்து சென்றதாக கூறப்பட்ட பாதை வழியாக நானும் இரவு, பகல் பாராமல் நடந்தேன். மதுரையில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள மங்களதேவி மலையை அடைந்தேன். 40 மைல் சுற்றளவில் கண்ணகி கோட்டத்தை தேடி அலைந்தேன். இறுதியில் அந்த கோட்டத்தைக் கண்டுபிடித்தேன். மண்டிக்கிடந்த புதருக்குள் சிறிய கோட்டைச் சுவர் போன்ற கல் கட்டடத்திற்குள் கண்ணகி சிலை இருந்தது. அந்த கற்களில் தமிழ் வட்டெழுத்தும், முற்கால பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துகளும் காணப்பட்டன. அங்கு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழங்கால மலைவாழ் மக்கள் மட்டும் இல்லையே தவிர, எஞ்சிய வன விலங்குகள், இயற்கை காட்சிகள், வேங்கை மரங்கள் என அத்தனை அடையாளங்களும் ஒருங்கே காணப்பட்டன.
மேலும், அங்கிருந்த கண்ணகி சிலை, இமயமலை கல்லில் செதுக்கப்பட்டது என்பதால், அந்த கல்லை ஆய்வுக்கு உட்படுத்தினேன். அது மாதிரியான கல் அருகில் உள்ள மலைகளிலோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள மலைகளிலோ இல்லை. இறுதியில் இமயமலை கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்தேன். தலையில் சுமந்து வரும் எடையளவில் இருந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளது கண்ணகி சிலை. அந்தச் சிலையைப் பாதுகாக்கும் வகையில் எனது வீட்டில் வைத்திருந்தேன். தகவலை அறிந்த அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்னை அழைத்து கண்ணகி சிலையைக் கேட்டார். அவர் கேட்டபடி அரசிடம் ஒப்படைத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

கண்ணகிக்கும் கடச்சனேந்தலுக்கும் என்ன தொடர்பு?
மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். சுமார் 25 வருடங்களுக்கு முன்புவரை இந்த ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே ‘கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது. சிலப்பதிகாரத்தோடு ஒன்றிய ஊர் இது. கண்ணகி – கோவலன் இருவரையும் சமணத் துறவி கவுந்தியடிகள் மதுரைக்கு அழைத்து வரும் வழியில் கடைசியாக அவர்கள் தங்கி இருந்தது இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தான். தற்போது எதுவும் இல்லாத வெளியாக, கண்ணகி வீடு அங்கு காட்சியளிக்கிறது.
அந்த வீட்டில் இருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் இந்த ஊருக்கு ‘கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர் வந்தது. அதன் பிறகுதான் பேச்சுவழக்கில் எல்லோரும் ‘கடச்சனேந்தல்’என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
சிறப்பு கட்டுரை: விஜி ஜோசப் (தலைமை செய்தியாளர்)
