• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் தாக்கி ஹாக்கி வீரர் பலி- காப்பாற்றச் சென்றவரும் உயிரிழந்த சோகம்!

ByP.Kavitha Kumar

Mar 18, 2025

நெல்லையில் மின்சாரம் தாக்கி ஹாக்கி வீரர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் வீட்டின் முன் பகுதியில் உள்ள கழிவறை புனரமைப்பு பணியை மேற்கொண்டிருந்தார். அந்த கழிவறை சுவற்றின் அருகே மின் இணைப்புக்கான மீட்டர் பெட்டி உள்ளது. இந்த நிலையில், கட்டிட புனரமைப்பு பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதற்கான கட்டுமானப் பொருட்களை கஜேந்திரன் மகன் வேலாயுதம் (30) எடுக்கச் சென்றார். அப்போது திடீரென அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ரவி என்பவர் வேலாயுதத்தை காப்பாற்றச் சென்றார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் கஜேந்திரன் வீட்டுக்குச் செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர். இதனைத்தொடர்ந்து மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த வேலாயுதம், ரவி ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். மின் விபத்து குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த வேலாயுதம், ஹாக்கி விளையாட்டு வீரர் என்பதும், அரசு வேலைக்கு செல்வதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதியும் வந்ததும் தெரிய வந்தது. அவரைக் காப்பாற்று சென்று உயிரிழந்த ரவிக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மின்சாரம் தாக்கி இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.