தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்த ஜாகீர் உசேன் பிஜில் நெல்லையில் இன்று அதிகாலையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் காட்சி மண்டம் அருகே வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜில். ரம்ஜான் நோன்பை ஒட்டி இன்று அதிகாலை தொழுகை முடிந்து ஜாகீர் உசேன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மர்மநபர்கள் வழிமறித்து சுற்றி வளைத்து வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜாகீர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த படுகொலை தொடர்பாக நெல்லை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜாகீர் உசேன் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை காவல் துணை ஆணையர் கீதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜாகீர் உசேன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வக்பு வாரியத்திற்குச் சொந்தமான 32 சென்ட் இடம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இப்பிரச்சினை தொடர்பாக வழக்கு இருந்த நிலையில் இந்த கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இடப்பிரச்சினை தொடர்பாக ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணத்தினால் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக ஜாகீர் உசேன் பிஜில் இருந்ததாக கூறப்படுகிறது.