கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அனுமதியின்றி அலங்கார வளைவுகள், பேனர்கள் மற்றும் கொடிகள் வைத்ததாக பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள், அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் என பலரும் வருகை புரிந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்து இருந்தார். அவரை வரவேற்கும் விதமாக அவிநாசி சாலை இருந்து கொடிசியா அரங்கம் மற்றும் அதனை சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அலங்கார வளைவுகள், கட்சியின் கொடிக் கம்பங்கள், பேனர்கள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
இந்த விழாவிற்காக, எவ்வித முன் அனுமதியும் பெறாமல், போக்குவரத்திற்கும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், சட்ட விரோதமாக கட்சி கொடிகளையும், பேனர்களையும், வரவேற்பு பதாகைகளையும், அலங்கார வளைவுகளையும் அமைத்து, பொதுத் தொல்லை ஏற்படுத்தியதாகவும், பொதுமக்களின் உயிருக்கும் உடல் பாதுகாப்பிற்கும் அபாயம் விளைவித்த செயலுக்காக கோவை, பீளமேடு காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் அ.தி.மு.க பொறுப்பாளர் லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. காவல் துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.