தமிழகத்தில் வருகிற மார்ச் 11ஆம் தேதியன்று நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். வரும் 10-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 11-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 12-ம் தேதி சில இடங்களிலும், 13-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 11 அன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
