• Sun. Dec 28th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசு எந்த துறையிலும் சாதிக்கவில்லை : நடிகை கௌதமி குற்றச்சாட்டு!

ByVasanth Siddharthan

Mar 7, 2025

பழநி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆர்.எப்.ரோடு பகுதியில் நடைபெற்றது. எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ரவி மனோகரன் ஏற்பாட்டில், நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் , அதிமுக துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டார். கொள்கை பரப்பு துணைச் செயலாளரான நடிகை கெளதமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினர். முன்னதாக பழநி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நத்தம் விசுவநாதனுக்கு வீரவாளும், நடிகை கெளதமிக்கு முருகன் சிலையும் பரிசாக வழங்கப்பட்டது.

நத்தம் விசுவநாதன் பேசும்போது,
“பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது அப்பனும், மகனும் அலங்கோல ஆட்சி நடத்துகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நம்பி அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் தற்போது எங்கள் முதுகில் குத்தி துரோகம் செய்துவிட்டார்கள் என புலம்பி கொண்டிருக்கிறார்கள். அதேபோல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகள், மாணவர்கள் என அனைவருக்கும் நாமம் சாத்திவிட்டார்கள். ஸ்டாலின் வந்தால் விடியல் தர போகிறார் என்றால், விலைவாசி உயர்வு பல மடங்கு உயர்ந்துவிட்டது. பொருளாதாரம் சீரழிந்து அரசு கடனில் தத்தளிக்கிறது. வரியை குறைத்து வசதியை பெருக்குவோம் என்று பொய் கூறினார்கள்.
ஆனால் அமைதி பூங்காவான தமிழகம் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு அமளி பூங்காவாக உள்ளது. மது, வன்முறை கலாச்சாரம், பாலியல் பிரச்சினை, கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. போதைப்பொருளின் சந்தை களமாக தமிழகம் மாறி மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஆனால் போதையின் பாதையில் செல்லாதீர்கள் என முதலமைச்சர் விளம்பரம் செய்து ஒரு விளம்பர ஆட்சியை நடத்துகிறார்.

ஜெயலலிதாவை எல்லோரும் பாசத்தில் அம்மா என அழைத்தனர். அதுபோல் ஸ்டாலின் அப்பா என அழைக்க விளம்பரம் தேடுகிறார். நல்ல திட்டங்களை செய்திருந்தால் மக்கள் அதை வரவேற்பார்கள். எனவே மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிந்தால் தான் விமோசனம். இதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மாற்றம் தான் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நடிகை கெளதமி பேசியதாவது:- கடந்த தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆனால் தற்போது தமிழ்நாடு எங்கே நிற்கிறது? மாணவர்களின் வளர்ச்சிக்காக ஜெயலலிதா கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் முடக்கிவிட்டார்கள். மு.க.ஸ்டாலின் ஆட்சியில் குழந்தை முதல் முதியோர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் பள்ளி சென்றுவிட்டு பீதியோடு தான் வருகிற நிலை இருக்கிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் வசதிகள் எதுவும் இல்லை. ஆனால் அவர்களை போதைப்பொருள், டாஸ்மாக்கில் வியாபாரமாக பயன்படுத்துகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என வாக்குறுதி கொடுத்து செயல்படுத்தினார். ஆனால் திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, தமிழகத்தில் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என கூறினார்கள். ஆட்சி வந்தபின்பு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது. விலைவாசி, பால், மின்சார கட்டணம் எல்லாம் ஆகாய அளவுக்கு உயர்ந்துவிட்டது. 10 அமாவாசைக்குள் தேர்தல் வரப்போகிறது. அதற்குள் கண்துடைப்பாக அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஏதாவது செய்து வாக்கு கேட்பார்கள். ஆனால் அவர்களின் செயல்பாடுகளை மறந்துவிடாதீர்கள்.
பழநியை திருப்பதி போல் மாற்றிகாட்டுவோம் என ஒரு பொய்யை சொன்னார்கள். ஆனால் முருகப்பெருமான் வாழ்கிற பழநி மலையைச் சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. கடமையை செய்வதாக சொன்ன மக்கள் பிரதிநிதி எங்கே? அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிற பழநி, கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை. எந்த துறையிலும் தமிழக அரசு சாதிக்கவில்லை. ஆனால் ஊழலில் தான் சிறப்பாக செயல்படுகிறது. எனவே மக்களிடம் மறுபடி வாக்கு கேட்க தகுதி இல்லை. எனவே 5 ஆண்டுகால கொடுமையை மக்கள் மனதில் வைத்திருக்கனும். மக்கள் நன்றாக வாழ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி. குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குப்புசாமி, வேணுகோபாலு, ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், பழநி ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன் ,முத்துச்சாமி
மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அன்வர்தீன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது, பேரூர் செயலாளர்கள் சக்திவேல் ,சசிக்குமார், விஜயசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.