சுற்றுலாவாசிகளை ஈர்க்க வேளாங்கண்ணியில் அமைகிறது படகு குழாம் ; சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் முதற்கட்ட பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு செய்தார்.
கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா வாசிகள் வருகைத் தருகின்றனர். இதனால் சுற்றுலா வாசிகளை கவரும் வகையில் வேளாங்கண்ணியில் படகு குழாம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படகு குழாம் அமையவுள்ள வேளாங்கண்ணி வெள்ளையாற்றில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

முதற்கட்ட பணிகள் தொடங்க உள்ளதால் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி அதிகாரிகளிடம் செயல்திட்டம் குறித்து கேட்டறிந்தார். செருதூர் பாலத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமையவுள்ள படகு குழாத்தில் அலையாத்தி அடர்வன காடுகள் அமைக்கப்பட்டு படகோட்டுதல், காற்றில் உலாவுதல், நீர் சறுக்கு விளையாட்டு, நீர் விளையாட்டுகள் என சுற்றுலாவாசிகளை கவர பல்வேறு சிறப்பம்சங்கள் அமைய உள்ளது.

விரைவில் படகு குழாத்தின் திட்ட மதிப்பீடு, செயல்திட்டம், ஆய்வறிக்கை உள்ளிட்டவைகள் முடிக்கப்பட்டு சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளது. சென்னையில் உள்ள முட்டுக்காடு படகு குழாமிற்கு அடுத்தபடியாக வேளாங்கண்ணியில் படகு குழாம் அமைய உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து பிரதாபராமபுரம் மற்றும் பூவைத்தேடி கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் கிராமப்புற சுற்றுலா திட்டம் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.