அபுதாபியில் நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக இந்திய பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உத்தப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாகிதி கான்(33). இவர் கடந்த 2021 டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஒரு வீட்டில் குழந்தை பராமரிப்பாளராக பணிக்குச் சேர்ந்தார். அப்போது அவரது பராமரிப்பில் இருந்த நான்கு மாதக்குழந்தைக்கு 2022 டிசம்பர் 7-ம் தேதி தடுப்பூசி செலுத்தப்பட்டது. அன்றைக்கு மாலையே அந்த குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையை ஷாகிதி கான் கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டதுடன் 2023 பிப்ரவரி 10-ம் தேதி அபுதாபி போலீசார், ஷாகிதி கானை கைது செய்து அல் வஹாப் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷாகிதி கானை குற்றவாளி என அறிவித்தது. அத்துடன் 2023 ஜுலை 31-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஷாகிதி கானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், அந்த குழந்தை வழக்கமான தடுப்பூசி போடப்பட்ட பிறகு இறந்ததாக ஷாகிதி கான் தரப்பில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை தள்ளுபடி செய்த அந்நாட்டு அரசு இவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து இவர் வாத்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பிப்ரவரி .21-ம் தேதி ஷாஜாதி கானின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடவும், அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லை தூக்கிலிடப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்தவும் கோரி அவரது தந்தை வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். அத்துடன் அதே தகவலைத் தெரிவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் கடைசியாக பிப்.15-ம் தேதி தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், தனக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, தனது பெற்றோருடன் பேசுவதே தனது இறுதி விருப்பம் என்றும் தெரிவித்ததாகவும் கூறியதாக கூறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தநிலையில், ஷாஜாதி கான் கடந்த பிப்ரவரி 15-ம் தேதியே தூக்கிலிடப்பட்டதாகவும், அவரது அடக்கம் மார்ச் 5-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. பிப்ரவரி 28-ம் தேதியே இந்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
மேலும், இது தொடர்பாக ஷாகிதி கானின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அப்போது, ஷாகிதி கானை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டது என்றும், கருணை மனுக்கள் அனுப்புதல், பொது மன்னிப்பு வழங்க ஐக்கிய அரசு அமீரக அரசுக்கு வேண்டுகோள் உள்பட அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் சட்ட ஆலோசகர்களையும் நியமித்து ஷாகிதி கானுக்காக வாதாடினோம். ஆனால், குழந்தை கொலை தொடர்பான குற்றங்களும் அதற்கான சட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் கடுமையானவை.எனவே, மத்திய அரசு முயற்சித்தும் ஷாகிதி கானை காப்பாற்றமுடியவில்லை. அவரின் இறுதிச்சடங்குபிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஷாகிதி கானின் குடும்பத்தினர் அபுதாபிக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருறது என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.








