• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அந்தமானில் தரையிறங்க முடியாமல் திரும்பி வந்த விமானம்

ByPrabhu Sekar

Mar 3, 2025

சென்னையில் இருந்து அந்தமானுக்கு 162 பயணிகளுடன் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 162 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டு சென்றது. அந்த விமானம், அந்தமான் விமான வான்வெளியை  நெருங்கிய போது, கடுமையான சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவிக் கொண்டு இருந்தது. 

இதை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்தது. அதோடு விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதை அடுத்து விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி அந்த விமானம் இன்று காலை 8 மணி அளவில், சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி வந்து தரையிறங்கி உள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்தமானில் வானிலை சீரடைந்த பின்பு, இந்த விமானம் மீண்டும் அந்தமான் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அந்தமான் செல்ல இருந்த 162 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.