வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக எம்எல்ஏ அம்மன் கே அர்ஜுனன் மீது வழக்கு பாய்ந்தது.
கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ வாக இருப்பவர் அம்மன் கே அர்ஜுனன். அ.தி.மு.க வில் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். முந்தைய சட்டமன்றத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வாகவும் இருந்தவர். இவர் கடந்த 2016 ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு கால கட்டத்தில் தன் வருவாய்க்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் குவிந்து இருக்கிறது. அதன் அடிப்படையில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
அ.தி.மு.க அம்மன் அர்ஜுனன் மட்டுமின்றி, அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தன் வருவாயை காட்டிலும் இரண்டு கோடிக்கு அதிகமான மதிப்பிலான சொத்துக்களை குவித்து இருப்பதாக அம்மன் கே அர்ஜுனன் மீது வழக்கு பதிவாகி இருக்கிறது. அவருடைய வருவாயை காட்டிலும் 71.19 சதவீதம் அதிகம் என்று லஞ்ச ஒழிப்பு துறையினர் கணக்கிட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்கு இடையே கோவையில் இன்று காலை முதலே அம்மன் கே அர்ஜுனனுக்கு சொந்தமான வீடு அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் தீவிர சோதனைகள் ஈடுபட்டு உள்ளனர்.