• Mon. Apr 29th, 2024

எடப்பாடியை சீண்டும் பாஜக..!

Byகாயத்ரி

Nov 26, 2021

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் பாஜக நடவடிக்கை எப்போதும் அதிமுகவை சீண்டும் வகையிலேயே இருக்கும். எனினும் அதிமுக அது குறித்து எப்போதும் கேள்வி எழுப்பியதே கிடையாது. இதனாலும் பாஜகவுக்கு அதிமுக அடிபணிந்து செல்கிறது என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.


அந்த வகையில் தற்போது அதிமுகவை மீண்டும் சீண்டியுள்ளது பாஜக. அதாவது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழகம் வந்துள்ள நிலையில், திருப்பூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.இதுதொடர்பாக திருப்பத்தூர் பாஜக அலுவலகம் திறக்கப்பட்டு, அதுதொடர்பாக வைக்கப்பட உள்ள கல்வெட்டு ஒன்றில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என பொறிக்கப்பட்டு உள்ளது.


அதாவது, 4 மாவட்ட பாஜக அலுவலகங்களை ஜே.பி நட்டா திறந்து வைத்தார். அப்படி திறந்து வைக்கப்பட்ட திருப்பத்தூர் மற்றும் திருப்பூர், பாஜக மாவட்ட அலுவலகங்களில் வைக்கப்பட்ட கல்வெட்டில் நயினார் நாகேந்திரன் பெயருக்கு கீழ் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என பொறிக்கப்பட்டிருக்கிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. அக்கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து வருகிறார். அப்படி இருக்கும்போது, 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கல்வெட்டில் பதிவு செய்துள்ளது சட்ட விரோதமானது என்று அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர்.


சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கும், தமிழ்நாடு சட்டமன்ற பாஜக கட்சித் தலைவர் பொறுப்புக்கும் பாஜகவுக்கு வித்தியாசம் தெரியாமல் பாஜகவினர் உள்ளதாக பலரும் விமர்சிக்கின்றனர். அதேநேரத்தில் பாஜக திட்டமிட்டே இவ்வாறு செய்ததா எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்திலும் அதிமுக வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *