கோடைகால சுற்றுலா தளமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு, சென்னையில் இருந்து, நேரடி இணைப்பு விமானங்களை, ஏர் இந்தியா விமான நிறுவனம் இயக்கத் தொடங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் இணைந்து, இந்த நேரடி இணைப்பு விமான சேவைகளை தொடங்கி உள்ளனர்.
சென்னையில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு நேரடி இணைப்பு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோடை வெப்பம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை சமாளிக்க குளுமையான ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதை அடுத்து ஏர் இந்தியா விமான நிறுவனமும்,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும் இணைந்து, சென்னையில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையங்களுக்கு, நேரடி இணைப்பு விமானங்களை இயக்க தொடங்கியுள்ளனர்.
அதன்படி தினமும் காலை 6 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், காலை 8.50 மணிக்கு, டெல்லி செல்லும். டெல்லியில் இருந்து காலை 10.30 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு, பகல் 12.05 மணிக்கு, ஜம்மு சென்றடையும்.
அதைப்போல் ஜம்முவில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், மாலை 5.15 மணிக்கு, டெல்லி வரும். டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் இரவு 8 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு இரவு 10.50 மணிக்கு வந்து சேரும்.
அதைப்போல் காஷ்மீரின் ஸ்ரீ நகருக்கு, சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், காலை 8.50 மணிக்கு, டெல்லி செல்லும். டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம், காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, ஸ்ரீ நகருக்கு காலை 11.50 மணிக்கு சென்றடையும்.
அதைப்போல் ஸ்ரீ நகரில் இருந்து பகல் 1.45 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானம், மாலை3.35 மணிக்கு, டெல்லிக்கு வந்து சேரும். டெல்லியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானம், இரவு 8:20 மணிக்கு, சென்னை வந்து சேர்கிறது.
கோடைகால வசந்த தளமான ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து இதை போல் நேரடி இணைப்பு விமானங்களை இயக்குவதாகவும், இந்த விமான பயணிகள் டெல்லியில் மாறினாலும், பயணிகள் ஒரே டிக்கெட்டில் சென்னையில் இருந்து ஜம்மு அல்லது காஷ்மீரின் ஸ்ரீநகர் வரை பயணிக்கலாம். அதைப்போல் பயணிகளின் உடைமைகளும் சென்னையில் விமானத்தில் ஏற்றப்படுவது நேரடியாக ஜம்மு, ஸ்ரீ நகருக்கு வந்து சேர்ந்து விடும் என்று ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது சென்னையில் இருந்து ஜம்மு காஷ்மீர் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.