வத்திராயிருப்பு அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், காதலர் மற்றும் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன். இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் வத்திராயிருப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி, இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கி சிறுமி கர்ப்பமானாதாக தெரிகிறது.

இதுகுறித்து, சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சௌந்தர பாண்டியன் பெற்றோரிடம் பேசி, இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்தனர். நேற்று காலை சுந்தரபாண்டியம் முருகன் கோயிலில் வைத்து சௌந்தர பாண்டிக்கு சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து ஊர் நல அலுவலர் சகுந்தலாவுக்கு தகவல் தெரிந்தது. உடனடியாக இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தார. ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவலர்கள் சௌந்தர பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





