• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த கருத்தரங்கு

ByKalamegam Viswanathan

Feb 10, 2025

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” எனும் மாபெரும் கருத்தரங்கம் இன்று (09-02-2025) திண்டுக்கல் PSNA கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கினை மண் காப்போம் இயக்கத்துடன் PSNA கல்லூரி மற்றும் HDFC வங்கி இணைந்து நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் பேசுகையில் “ஈஷா மண் காப்போம் இயக்கம் தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடும் விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் மண்வளத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்காக என்ற நோக்கத்தோடு, வெற்றி பெற்ற விவசாயிகளின் அனுபவ பகிர்வு விவசாயிகளையே சென்றடையும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் புதிதாக களம் காணும் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.

இதுவரை தமிழகம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக இயற்கை விவசாய களப்பயிற்சி வழங்கியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த வழிகாட்டுதல்களை வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவும் நேரடியாக அவர்களின் நிலங்களுக்கு சென்றும் வழங்கி வருகிறது.இதன் மூலம் 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில், விவசாயிகள் ஒரே ஒரு பயிரை மட்டுமே நம்பி விவசாயம் செய்வதால், போதுமான விளைச்சலும், விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கு தீர்வாக ஈஷா மண் காப்போம் இயக்கம் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” என்ற மாபெரும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.” இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து, பி.எஸ்.என்.ஏ கல்லூரியின் செயலாளர் திரு. பாலகணேஷ் இந்நிகழ்விற்கான வாழ்த்துரை வழங்கினார் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாலர் திரு. முத்துக்குமார் ‘இயற்கை விவசாயத்தின் அவசியம்’ குறித்து விளக்கினார்.
இந்நிகழ்வில் ஆடு, மாடு, கோழி, மற்றும் பயிர்கள் வளர்த்து வருடத்திற்கு 12 லட்சம் வருமானம் ஈட்டி வரும் முன்னோடி விவசாயி துளசிதாஸ் பேசுகையில், “இரசாயன விவசாயத்தை செய்து அதில் விருதுகள் பெற்றிருந்த போதும், புற்றுநோயினால் என்னுடைய சகோதரி மரணம் அடைந்த பின்னர் இயற்கை விவசாயத்திற்கான தேடல் எனக்குள் தொடங்கியது. அப்போது முன்னோடி விவசாயியான கலியமூர்த்தியும் ஈஷா மண்காப்போம் இயக்க பயிற்சிகளும் எனக்கு வழிகாட்டியாக அமைந்தன.

இன்று என் நிலத்திற்கு உகந்த பாரம்பரிய நெல் ரகமான ஆத்தூர் கிச்சிலி சம்பா பயிர் செய்ததன் மூலம் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. அந்தந்த நிலத்திற்கு ஏற்ற நெல் ரகத்தை வளர்ப்பதன் மூலம் அதிக மகசூல் சாத்தியம். ஆனால் அதற்கான போதிய காலம் எடுத்துக்கொள்ளும். எனக்கு 10 ஆண்டுகள் பிடித்தது.

இன்று பலர் குறைந்த காலத்திலேயே நம்மாழ்வார் ஆகி விட வேண்டும் என நினைக்கின்றனர். இயற்கை விவசாயத்தில் போதுமான காலம் பயணம் செய்தால் தான் வெல்ல முடியும்..” என்றார்

அவரை தொடர்ந்து, ஆடு வளர்ப்பில் மாதம் 1 லட்சம் ஈட்டும் எம்.ஆர்.கே பண்ணை கௌதம் அவர்கள் பேசுகையில் “”விவசாய குடும்பத்திலிருந்து பொறியியல் படித்து விட்டு ஐடி துறையில் பணியாற்றி வந்தேன். ஆனாலும் என்னுடைய ஆர்வம் விவசாயத்தில் இருந்தது. கொரனா காலத்திற்கு பிறகு முழு நேர விவசாயியாக மாறி நாட்டு ஆடுகளை வளர்த்து வருகிறேன். என்னுடைய விவசாய செயல்பாடுகளை யூடியூப் மூலம் அன்றாடம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தேன். இப்போது அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

நீங்கள் எத்தனை யூடியுப் சேனல்களை பார்த்தாலும், எத்தனை பேரை சந்தித்தாலும் கால்நடை வளர்ப்பு தெரிந்து கொள்ளலாமே தவிர அது முழுமையான அனுபவமாக இருக்காது.

எனவே சிறிய அளவில் ஆடுகள் வாங்கி வளர்த்தால் மட்டுமே உண்மையான சவால்களை தெரிந்து கொள்ளவும், அதிலிருந்து மீண்டு வரும் உத்திகளும் உங்களுக்கு தெரியும். அப்படி செய்தால் மட்டுமே அது நல்ல வளர்ச்சியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்

மேலும் சிறுவிடை கோழிகள் மூலம் வருடத்திற்கு 12 லட்சம் வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயி அண்ணாதுரை, மீன் வளர்ப்பில் 30 வருட அனுபவம் கொண்ட சர்மஸ்த், மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையில் கீரை சாகுபடி மூலம் சாதித்து வரும் கோவையை சேர்ந்த முன்னோடி விவசாயி கந்தசாமி உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நல்ல வருமானம் பெற முடியும் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்தும் விதமாக ஆடு, மாடு, கோழி, வாத்து, மீன் ஆகியவைகளை உள்ளடக்கிய ‘மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை’ ஒன்றை நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு இருந்தது. இதனுடன் விதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது.