டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அர்விந்த கேஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் ஆதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி முகத்தை எட்டியுள்ளார். அவர் 28ஆயிரத்து 238 வாக்குகள் பெற்ற நிலையில் 3ஆயிரத்து 789 வாக்குகள் பின்தங்கி 24 ஆயிரத்து 449 வாக்குகளுடன் அர்விந்த் கேஜ்ரிவால் பின்னடைவைச் சந்தித்தார்.
அதேபோல் ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் 34 ஆயிரத்து 632 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தநிலையில் 572 வாக்குகள் வித்தியாசத்தில் மணீஷ் சிசோடியா பின் தங்கினார். ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களான கேஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவின் தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் கைதாகி திகார் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.