அதிமுக சார்பில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிப்ரவரி 10-ம் தேதி திறந்துவைக்கிறார்.
டெல்லியில் அதிமுகவுக்கு ஒரு அலுவலகம் திறக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அதற்குத் தேவையான இடம் கோரி மத்திய அரசிடமும் விண்ணப்பித்திருந்தார். அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு மத்திய நகரப்புற மேம்பாட்டு அமைச்சகம், அதிமுகவுக்கு, புதுடெல்லியில் உள்ள சாகேத் பகுதியில், எம்.பி. சாலையில் 1,008 சதுர மீட்டர் கொண்ட நிலத்தை ஒதுக்கியது. இதற்காக மத்திய அரசு நிர்ணயித்த ரூ.22.46 லட்சத்தையும் அதிமுக செலுத்தி இருந்தது. இந்த இடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிவுற்ற நிலையில், பிப்ரவரி 10-ம் தேதி திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, காணொலி வாயிலாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து திறந்து வைக்க உள்ளார். தற்போது அதிமுக எம்.பி.க்கள் டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்று வரும் நிலையில், மற்ற நிர்வாகிகளும், முன்னாள் எம்.பி.க்களும் டெல்லி புறப்பட்டு சென்று விழாவில் பங்கேற்கின்றனர்.
அதே போல் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க செல்லும் போதும் இந்த அலுவலகத்தில் தங்குவார் என்றும் சொல்லப்படுகிறது. 25 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகம் அனைத்து நவீன வசதிகளும் உள்ளடங்கிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.