சிவகாசியில், நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சியைக் காண விருதுநகர் சாலையில் உள்ள பழனியாண்டவர் தியேட்டரின் முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கைகளிலும், தலையிலும் வைத்து பட்டாசுகள் வெடித்தும், கலர் கலரிலான புகையை மற்றும் வண்ணக்காகித தாள்களை வெளிப்படுத்தும் பட்டாசுகளை கொளுத்தியும், மேளதாளத்துடன், ஆட்டம் பாட்டத்தோடு அஜித் ரசிகர்கள் உற்சாகமாக திரைப்பட வெளியிட்டை கொண்டாடினர்.
கொண்டாட்டத்தின் போது தியேட்டர் முன்பாக பிரதான சாலையில் ரசிகர்கள் ஒன்று திரண்டு கூடியதால், அப்பகுதியில் வாகன போக்குவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஆர்வம் மிகுதியால் ரசிகர்கள் பலர் சாலையில் வந்த கல்லூரி பேருந்தை மறித்து அதன் முன்பக்கத்தில் ஏறி நின்று மீது ஆட்டம் போட்டு அலப்பறை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித் ரசிகர்கள் சாலை நடுவே நடந்த கொண்டாட்டத்தின் காரணமாக பள்ளி- கல்லூரிகளுக்கு செல்பவர்களும், பட்டாசு தொழிற் சாலைகளுக்கான பணிகளுக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையின் நடுவே கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அஜித் ரசிகர்களை கட்டுப்படுத்தி தியேட்டர் வளாகத்திற்குள் செல்லுமாறு அறிவுறுத்தியதோடு, சரவெடி பட்டாசு கொளுத்த முயன்ற ரசிகர் ஒருவரை பிடித்து பட்டாசையும் பறிமுதல் செய்தனர். பின்பாக அஜித் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் போலீசார் அழைத்துச் சென்ற அந்த ரசிகரை காவல்துறையினர் விடுவித்தனர்.