எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்
பூவில் வறுந்தலை போலப் புல்லென்
றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்
தெல்லுறு மௌவல் நாறும்
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே.
பாடியவர்: பரணர்
திணை: மருதம்
பாடலின் பின்னணி:
தலைவன் தலைவியைப் பிரிந்து சிலகாலம் வாழ்ந்து வந்தான். அவன் திரும்பி வந்தபொழுது, தலைவி அவன்மீது மிகுந்த கோபத்தோடு ஊடினாள். அவன் தலைவிடம் தன் அன்பைத் தெரிவித்து அவளைத் தேற்றினான். ஆனால், அவள் பின்னும் தொடர்ந்து ஊடினாள். “இவள் தன் பழைய தன்மையிலிருந்து மாறி நம்மோடு உறவில்லாதவள் போல் இருக்கின்றாள்” என்று தன் நெஞ்சை நோக்கித் தலைவன் வருந்திக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடலின் பொருள்:
வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் படர்ந்திருந்த முல்லைகொடியின் பூக்கள் மணக்கும் அடர்ந்த கரிய கூந்தலை உடைய இவள் இனி நமக்கு என்ன உறவோ? ஆதலால், எவ்வி என்னும் வள்ளலை இழந்ததால் வறுமையுற்ற யாழ்ப்பாணர்களின் தலைகள் பொன்னாலான பூக்கள் இல்லாமல் பொலிவிழந்து காணப்படுவதுபோல், நெஞ்சே, நீயும் இனி பொலிவிழந்து வருந்துவாயாக!