• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 12:

Byவிஷா

Jan 29, 2025

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவர் சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.

பாடியவர்: ஓதலாந்தையார்
திணை : பாலை

பாடலின் பின்னணி:
தலைவியைப் பிரிந்து, கடத்தற்கரிய பலை நிலத்தில் தலைவன் சென்று கொண்டிருந்தான். அவன் பாலை நிலத்தைக் கடக்கும்பொழுது, எத்துணைத் துன்பப்படுகிறானோ என்று எண்ணித் தலைவி வருந்துகிறாள். தலைவனின் பிரிவைவிட, பாலைநிலத்தில் அவன் படும் துன்பம்தான் அவளை மிகவும் வருத்தியது. அவள் வருத்தத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட அவ்வூர் மக்கள், அவள் தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் வருந்துவதாக நினைத்து அவளைப்பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்.

பாடலின் பொருள்:
தலைவன் பாலை நிலத்தைக் கடந்து செல்கிறான். அங்கே, எறும்பின் வளைபோன்ற சிறிய நீர்ச்சுனைகளே உள்ளன. கொல்லனுடைய உலைக்களத்திலுள்ள பட்டடைக் கல்லைப் போல் வெப்பம் மிகுந்த பாறைகளின் மேல் ஏறி, வளைந்த வில்லை உடைய வேடர்கள், தங்கள் அம்புகளை, அப்பாறைகளில் தீட்டுகின்றனர். அங்கே, பாதைகள் பலவாகப் பிரிந்து செல்கின்றன. அத்தகைய பாலை நிலத்தின் கொடுமையை நினைத்து நான் வருந்துகிறேன். இந்த ஆரவாரம் மிகுந்த ஊர், என்னுடைய துயரத்தின் உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்ளாமல், அன்பில்லாத சொற்களைக் கூறி என்னைப்பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்.