• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டிக் டாக் செயலி அமெரிக்காவில் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

ByP.Kavitha Kumar

Jan 20, 2025

அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக் டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

‘டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இந்த செயலியை பல்வேறு தரப்பினரும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலிக்கு அமெரிக்காவில் ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது. தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி டிக்டாக்கிற்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என்று கூறியது.

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் நேற்று [ஜனவரி 19] முதல் தடை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, டிக்டாக் செயலியின் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக் டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியது. அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கவுள்ள டொனால்டு ட்ரம்ப், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அளித்துள்ள உறுதியைத் தொடர்ந்து சேவையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.