பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய போட்டியாளரான நடிகை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட. இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.தற்போது பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியில் 18வது சீசனாக பிக் பாஸ் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 6-ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகையான ஸ்ருத்திகா கலந்து கொண்டார். வசந்தபாலன் இயக்கிய ஆல்பம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர்.
இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக மாறிய ஸ்ருத்திகா, டைட்டிலை வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 90 நாட்களைக் கடந்து விட்ட இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருத்திகா வெளியேற்றப்பட்டுள்ளார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள், அதிர்ச்சியடைந்துள்ளனர். நியாயமற்ற வகையில் ஸ்ருத்திகா வெளியேற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.