• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தென்கொரியாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாமா

Byவிஷா

Dec 5, 2024

தென்கொரியாவில் வடகொரிய ஆதரவாளர்களை விரட்டுவதற்காக அவசரநிலை (ராணுவச் சட்டம்) அறிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கொரிய நாடு இரண்டாக பிரிந்ததிலிருந்து தென்கொரியா நாடு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் கட்டுப்பாட்டிலும், வடகொரியா சீனா, ரஷ்யா நட்பின் ஆதிக்கத்திலும் இருந்து வருகிறது. தென்கொரியா பற்றி அதிக அளவில் செய்திகள் வராவிட்டாலும், வடகொரியா குறித்து வரிசையாக செய்திகள் வந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். காரணம் அந்நாடு, தனது சொந்த மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான அடக்குமுறைகளை கையாள்கிறது என்றும், உள்ளே என்ன நடக்கிறது என்பது கூட வெளியில் தெரியக்கூடாது என கவனமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது.
கிளப்புகள், பார்கள், சினிமா தியேட்டர்கள், பாப் இசைகள் போன்றவற்றிற்கு வடகொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதாக சொல்லப்பட்டன. தவிர, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், சர்வாதிகாரியாக இருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் பெரியதாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை. தென்கொரிய நாட்டு ஊடகங்கள் எழுதும் யூக தகவல்களை மற்ற ஊகடங்கள் அப்படியே மொழிபெயர்த்து வந்தன. சூழல் இப்படி இருக்கையில், பிரச்னை வடகொரியாவில் இல்லை, தென் கொரியாவில்தான் என்று உணர்த்தும் விதமாக சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதாவது அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல் திடீரென அவசர நிலையை அறிவித்தார். தென்கொரியாவில், வடகொரிய ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றும், அவர்களை வெளியேற்றுவதற்கும், ஒடுக்குவதற்கும் இந்த அவசர நிலை(ராணுவ சட்டம்) அறிவிக்கப்படுவதாகவும் திடீரென தொலைக்காட்சி முன்பு தோன்றி கூறியிருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை எழுப்பியிருந்தன.
தென்கொரியாவில் தற்போது இருப்பது ஒரு நிலையற்ற அரசாகும். அந்நாட்டின் வரலாற்றில் 50சதவீதத்துக்கும் குறைவான ஆதரவோடு ஒருவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது யூன் சாக் யோல்தான். எனவேதான் அவசர நிலக்கு எதிர்ப்புகள் பலமாக இருந்தன. நாடாளுமன்றத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய போராட்டக்காரர்கள், எதிர்ப்பு முழக்கங்களுடன் உள்ளே நுழைய முயன்றிருக்கின்றனர். இதனால் ராணவத்திற்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.
மறுபுறம் இந்த அவசர நிலைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வாக்களித்துள்ளனர். எனவே, அவசர நிலை அறிவிப்பு செல்லாது என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இது போராட்டக்காரர்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தென்கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாதுகாப்புத்துறை அமைச்சர் கிம் யோங்-யூன் ராஜினாமாவை அதிபர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவருக்கு பதிலாக புதிய பாதுகாப்பு துறை அமைச்சராக சோய் பியூங் ஹயூக் என்பவரை நியமித்திருக்கிறார். இவர் தென்கொரியாவின் சவுதிக்கான தூதராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.