• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது

Byவிஷா

Nov 5, 2024

நடப்பாண்டிற்கான சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண வரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடப்பாண்டுக்கான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறகிறத. இந்த போட்டிகள் இன்று ( நவம்பர் 5) முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டியினை இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா இன்று (05.11.2024) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, போட்டியில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இப்போட்டியின் மொத்த பரிசு தொகையான ரூ. 70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது. இப்போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகைசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்களும், சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, வி. பிரணவ், எம். பிரனேஷ் மற்றும் ஆர். வைஷாலி போன்ற 8 இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் விளையாட உள்ளனர்.
மாஸ்டர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ. 15 லட்சம், சேலஞ்சர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றிபெறுவோருக்கு ரூ. 6 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படும்.
இப்போட்டியினை நேரடியாக காண குறிப்பிட்ட அளவிலான இருக்கைகள் பதிவு செய்யப்பட்ட செஸ் அகாடமி மாணவ – மாணவியருக்கு இலவசமாக பார்க்கும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பார்வையிட நாள் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அனுமதி டிக்கெட்டை BookMyShow இணையத்தளத்தின் மூலமாக (https://in.bookmyshow.com/sports/chennai-grand-masters-2024/ET00418069) பதிவு செய்துகொள்ளலாம்.

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியை தங்களுக்கு விருப்பமான தேதிகளில் இலவசமாக காண செஸ் அகாடமிகள் [email protected] & cc [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.