வாடிப்பட்டி ஆட்டுச் சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்கப்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை போன்ற தொலைதூர மாவட்டங்களில் இருந்தும் கொண்டு வந்த ஆடுகளை அதிக விலைக்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் தீபாவளி திருநாள் இரண்டு தினங்களே உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை ஆன இன்று ஆயிரக்கணக்கில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. குறிப்பாக செம்மறி ஆடுகள் மயிலம்பாடி ஆந்திரா வகை கர்நாடகா வகை போன்ற ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்காக வந்திருந்தது. தமிழகத்தின் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை போன்ற தொலைதூர மாவட்டங்களிலிருந்தும் தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.


இதில் 10 கிலோ எடை கொண்ட குட்டி ஆடுகள் கிலோ 800 ரூபாய்க்கும், 25 கிலோ ஆடு 15 ஆயிரம் ரூபாய்க்கும் 25 கிலோ எடையுள்ள ஆட்டுக்கிடாய் 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதேபோல் சேவல் கோழிகளும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது கோழி கிலோ 400 ரூபாய்க்கும் சேவல் ₹600 க்கும் நாட்டுக்கோழி 800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் அதிகாலை 3 மணி முதல் வர்த்தகர்கள் டாட்டா ஏசி மினி வேன் இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளில் ஆடு மற்றும் கோழிகளை வாங்கிச் சென்றனர்.

அங்கிருந்த வியாபாரிகள் கூறுகையில்.., பொதுவாக 50 லட்சத்திற்கு விற்பனையாகும் வார சந்தையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்துள்ளது. முக்கியமாக ஆந்திரா கர்நாடகா வகை ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையானது என்று கூறினார்.

