மருது சகோதரர்களின் 223வது குருபூஜை நிகழ்ச்சி, 500 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அஞ்சலி செலுத்தி ஆதினத்தின் பூஜையுடன் துவங்கியது. சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் அஞ்சலி செலுத்தினர்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 223 வது குருபூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு, கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அஞ்சலி செலுத்தி கோவை காமாட்சிபுரி ஆதினம் யாகபூஜையுடன் விழா துவங்கியது.

வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 223வது குருபூஜை நிகழ்ச்சி அவர்களது நினைவிடம் அமைந்துள்ள காளையார்கோவிலில் இன்று கொண்டாடப்படுகிறது.இந்த குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்த தென்மாவட்டங்களை சேர்ந்த சமுதாய தலைவர்கள் மற்றும் சிவகங்கை எம் எல் ஏ செந்தில்நாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் மற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் வரவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கென மாவட்டம் முழுவதுக்கும் மாவட்ட எஸ்.பி டோங்க்ரே பிரவின் உமேஷ் உட்பட 2 எஸ்.பிக்கள் தலைமையில், 6 ஏ.டி.எஸ்.பிக்கள், 20 டி.எஸ்.பிக்கள், 58 இன்ஸ்பெக்டர்கள், 291 எஸ்.ஐக்கள் உட்பட 2081 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருவதுடன் மாவட்டத்தின் முக்கிய நுழைவு வாயில்களில் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வரக்கூடிய வாகனங்கள் சோதனையிடப்படுவதுடன் முக்கிய வழித்தடங்களில் 49 இருசக்கர ரோந்து வாகனமும், 23 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும் அமர்த்தப்பட்டு விழாவிற்கு வரக்கூடிய வாகனங்களை கண்காணிக்கவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரச்சனைக்குரிய பகுதிகளில் வாகனத்தில் நிகழ்ச்சிக்கு வருவோர் செல்லாமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மருது சகோதரர்களின் நினைவிடத்தில் முதல் பூஜையை துவக்க உள்ளூர் பெண்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பால்குடம் சுமந்து வந்து அவர்களது உருவச்சிலைக்கு பாலபிஷேகம் நடத்தியதுடன் கோவை காமாட்சிபுரி ஆதினம் தலைமையில் யாகசாலை அமைக்கப்பட்டு வேதங்கள் முழங்க பூஜையுடன் விழா துவங்கியது. இதனை தொடர்ந்து சமூதாய தலைவர்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
