திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம் பேட்டையில் மூதாட்டியின் கை கால்கள் கட்டப்பட்டு மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்து, தலை மறைவாக உள்ள மேலும் இரண்டு பேருக்கு போலீசார் வலை வீசிதேடி வருகின்றனர்.
பல்லடம் அருகே காரணம் பேட்டையில் வசித்து வந்த கண்ணம்மாள் 65. இவரது கணவர் சுப்பையன் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் திருப்பூர் மற்றும் பல்லடம் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். கண்ணம்மாள் மட்டும் காரணம்பேட்டை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை மர்ம நபர்கள் அவரைத் தாக்கி கை, கால்களை கட்டி போட்டு பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதோடு பீரோவை சுற்றி மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். 19ஆம் தேதி சனிக்கிழமை கண்ணம்மாவின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையில் கண்ணம்மாவின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த துணிகள் கலைக்கப்பட்டு இருந்தது. பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ் பி அபிஷேக் குப்தா உத்தரவின் பெயரில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் பல்லடம் அருகே மாதப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா தேவி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக ஒரு காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, முன்னுக்குப் பின் முரணாக காரில் வந்தவர்கள் பதிலளித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் காரணம்பேட்டையை சேர்ந்த கண்ணம்மாள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் கேரளா செல்ல காரில் வந்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம் அன்பா சமுத்திரத்தை சேர்ந்த ஆதி மூலம் மகன் கருத்த பாண்டி 27 அதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் இசக்கி முத்து 41 கோடி முத்து மகன் இசக்கி முத்து 27 என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் கண்ணம்மாள் வசித்து வந்த வீட்டின் அருகே முருகேசன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார் இதில் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மாஸ்டராக இரண்டு வருடமாக அதே பகுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார் இந்நிலையில் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தவர் 65 வயது மூதாட்டி கண்ணம்மாள் கழுத்தில் 12 சவரன் நகையும் கையில் 3 சவரன் வளையலும் அணிந்திருப்பதை நோட்டமிட்டு வந்த பாஸ்கரன் அவரிடம் இருந்த நகைகளை திருடத் திட்டம் தீட்டி வந்துள்ளார். இதை அடுத்து சொந்த ஊரில் உள்ள நண்பர்கள் நான்கு பேரை காரணம் பேட்டை பகுதிக்கு வரவழைத்து இரு தினங்களுக்கு முன்பு இரவு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டிற்குச் சென்று அவரின் கை கால்களை கட்டி போட்டு மூச்சை அடைத்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 15 சவரன் நகையை திருடிக் கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்பது பவுன் தங்கச் செயின் மற்றும் இரண்டு வளையல்கள் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிபதி முன்பு அவர்களை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் இரண்டு முக்கிய குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.