சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை அளித்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தமிழக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் ஏராளமான துறை சார்ந்த அதிகாரிகள் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் திருப்பத்தூர் வட்டாரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், பெறப்பட்ட மனுக்கள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில் வந்திருந்த மனு ஒன்றில் தங்கள் பகுதியில் புதர்மண்டி கிடப்பதை அகற்ற கோரி ஒருவர் மனு அளித்திருந்த நிலையில் அதன்பேரில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரான சோமதாசனிடம் அமைச்சர் கேள்வி கேட்க, அதனை சுத்தப்படுத்தியதாக அவர் பதிலளித்தார். இதனை அடுத்து அமைச்சர் அந்த மனு அளித்தவரை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த மனு தாரர் மறுப்பு தெரிவிக்கவே அதிர்ச்சடைந்த அமைச்சர் வட்டார வளர்ச்சி அலுவலரை எச்சரித்துவிட்டு அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்நிலையில் அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணியை முறையாக செய்யாததாக கூறி, பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். அமைச்சர் ஆய்வு கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலரை ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து, மேலும் அங்கன்வாடி பணியாளர் ஒருவரும், சமையலர் இருவர் ஆகியோரை பணியிட மாற்றம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
