மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 30வது ஆண்டு விளையாட்டு விழா மிக விவரச்சையாக நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகமதுஜலீல் தலைமை தாங்கினார். கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.சீனிமுகைதீன், இணை முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.சீனி முகமது அலியார் மறைக்காயர், நிர்வாக இயக்குனர் எஸ்.எம்.நிலோபர்பாத்திமா, ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.எம். நாசியாபாத்திமா முன்னிலை வகுத்தனர். முதல்வர் சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி உடற்பயிற்சி இயக்குனர் சிவகணேஷ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினராக இந்திய ரயில்வே சர்வதேச கூடைப்பந்து வீராங்கனை தர்ஷினி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் பேங்க் துணைத் தலைவர் தேசிய கைப்பந்து வீரர் நாகேஸ்வரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். முன்னதாக தேசியக்கொடி, ஒலிம்பிக்கொடி, கல்லூரி கொடியை கல்லூரி தலைவர் முகமது ஜலில் ஏற்றினார். மாணவர்கள் அணி வகுப்புடன் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகள் சிகப்பு, ஊதா, பச்சை, மஞ்சள் என்ற அணிகளாக பிரிக்கப்பட்டு 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர்,1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் 1600 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், கைப்பந்து, கூடைப்பந்து, எரிபந்து போட்டிகளில் பங்கேற்றனர். இதில் சிகப்பு அணி 50 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சிறந்த விளையாட்டு வீரராக இ. சி. இ. மூன்றாம் ஆண்டு மாணவர் நவீன் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக ஏ. ஐ. டி. எஸ். இரண்டாம் ஆண்டு மாணவி திவ்யபாரதி தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் வேளாண்மை பொறியியல் துறை தலைவர் முத்து சோலை ராஜன் நன்றியுரை நல்கினார்.