உசிலம்பட்டி அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது, கிராம மக்களால் வளர்க்கப்பட்ட மரங்கள் சேதம். கிராம மக்கள் பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கட்டளைமாயன்பட்டி கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தை பசுமையாக மாற்ற கிராம மக்கள் சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டளைமாயன்பட்டி பிரிவில் இருந்து கிராமம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பல்வேறு வகையான 150 மரக்கன்றுகளை சாலையோரம் வைத்து தினசரி நீர் ஊற்றி பராமரித்து வளர்த்து வந்தனர்.
தற்போது அனைத்து மரக்கன்றுகளும் நன்கு வளர்ந்து நிழல் தரும் மரமாகியுள்ள சூழலில் இன்று மத்திய அரசின் ஜேஜேஎம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்க ஜேசிபி இயந்திரம் மூலம் மரங்களின் வேர்களை வெட்டி அதன் அருகிலேயே பள்ளம் தோண்டியதால் மரங்களின் வேர்கள் சேதமடைந்தது விரைவில் சாய்ந்து விழும் நிலை உருவாகி உள்ளது.
இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து பள்ளம் தோண்டி கொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ஊராக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாற்று வழியில் குடிநீர் குழாயை பதிக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.