மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக வருகின்ற செப்டம்பர் 6-ஆம் நாள் நடைபெற உள்ள அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,பங்கேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி அருகே உள்ள வேலம்மாள் வளாகத்தில் (19.08.2024) வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , தலைமையில், மாவட்ட நிர்வாகம் சார்பாக வருகின்ற செப்டம்பர் 6-ஆம் நாள் நடைபெற உள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான கால்கோள் நடும் விழா நடைபெற்றது.
தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார், தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு, அரசின் திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக வருகின்ற செப்டம்பர் 6ஆம் நாள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா ஆணைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்டங்கள் என பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இவ்விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதற்கான முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி விழா நடைபெறும் இடத்தில், அரங்கு அமைப்பதற்கான கால்கோள் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.செள.சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் மதுமதி, மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.