பெரம்பலூர் அருகே நிலத்தை விற்று பணம் தர மறுத்த தாய், தங்கையை கொலை செய்த பெண்ணிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே அய்யலூர் கிராமத்தை சேர்ந்த தமிழரசன். இவரது மனைவி ராணி, இவரது மகள்கள் வள்ளி, ராஜேஸ்வரி ஆகியோர். வள்ளி (35) அதே ஊரை சேர்ந்த ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு அதே ஊரில் வசித்து வருகிறார். ராஜேஸ்வரியும் (28) அதே ஊரை சேர்ந்த சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது தாய் ராணி வீட்டில் வசித்து வந்தார்.
வள்ளி அதே ஊரை சேர்ந்த கலையரசி என்பவரிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அது வட்டியும் முதலாக ரூ . 8 லட்சமாகிவிட்டது. அந்த கடனை செலுத்துவதற்காக தனது அம்மாவான ராணி (60) யிடம் அவரது நிலத்தை விற்று கடனை அடைக்க பணம் தருமாறு வள்ளி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் . இதற்கு ராணி தான் உயிருடன் இருக்கும் வரை நிலத்தை விற்க முடியாது என மறுத்துள்ளார் . மேலும் ராணியும் அம்மாவிற்கு ஆதரவாக நிலத்தை விற்று பணம் தர முடியாது கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு ஜூன் மாதம் 19ம்தேதி இரவு 10 மணியிலிருந்து நிலம் விற்று பணம் வழங்கோரி தனது தாய் ராணி மற்றும் தங்கை ராஜேஸ்வரியிடம் வள்ளி வற்புறுத்தி தகராறு செய்துள்ளார். இந்த தகராறு நள்ளிரவு ஒரு மணிவரையும் நடந்ததுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வள்ளி தனது தங்கை ராஜேஸ்வரியை அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி கயிற்றால் கழுத்தை நெருக்கி கொலை செய்துவிட்டு, தனது தாயை ராணியின் வாயில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு இரட்டை கொலை செய்த வள்ளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு வக்கீல் சுந்தர்ராஜன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, தாய், தங்கை ஆகிய 2 பேரை கொலை செய்த வள்ளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் தொகை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுப்பவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் வள்ளியை திருச்சி மத்திய மகளிர் சிறையில் அடைத்தனர்.