துபாய் பயணி தொலைத்த கைக்கெடிகாரத்தை நேர்மையாக ஒப்படைத்த இந்தியச் சிறுவனை துபாய் போலீசார் கௌரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துபாய்க்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் அவரது கைக்கடிகாரத்தை அங்கு தொலைத்துள்ளார். அந்த கடிகாரத்தை இந்தியாவை சேர்ந்த சிறுவன் யூனிஸ் பார்த்துள்ளார். அதை எடுத்துச்சென்று போலீசிடம் ஒப்படைத்தார். அந்த பயணி அவரது சொந்த ஊர் திரும்பிய நிலையில், மீண்டும் அவரை தொடர்பு கொண்டு துபாய் போலீசார் கடிகாரத்தைக் கொடுத்துள்ளனர். இதற்கு அந்த பயணி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், சுற்றுலா காவல்துறை இயக்குநர் பிரிகேடியர் கல்பான் ஒபைத் அல் ஜலாப், துணை லெப்டினன்ட் கர்னல் முகமது அப்துல் ரகுமான், சுற்றுலா துறை தலைவர் கேப்டன் ஷஹாப் அல் சாடி ஆகியோர் இந்திய சிறுவன் யூனிஸை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
இதுதொடர்பான புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், சுற்றுலா பயணியின் தொலைந்த கடிகாரத்தை திருப்பி அளித்த சிறுவனின் நேர்மையை துபாய் போலீஸ் கவுரவிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
இந்தியச் சிறுவனின் நேர்மைக்கு துபாய் போலீசார் கௌரவிப்பு
