மதுரை விமானநிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் ஒன்று பாரம் தாங்காமல் பயணிகளின் உடைமைகளை விமானநிலையத்திலேயே விட்டுச் சென்று தமிழக பயணிகளை தவிக்க வைத்திருக்கிறது.
நாள் தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ஒவ்வொரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு பறந்து செல்கிறது. விமானத்தில் குறிப்பிட்ட அளவு எடையை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அந்த வகையில் ஒரு பயணி அதிகபட்சமாக 40 கிலோ முதல் 50 கிலோ கொண்டு செல்லலாம். இந்தநிலையில் நேற்று மதியம் மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் அதிக எடை இருப்பதாக கூறி 100 பயணிகளின் உடமைகளை விமான நிலையத்திலையே விட்டு சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுரையில் இருந்து தினமும் ஸ்பைசெட் விமான சேவை துபாய்க்கு இயக்கப்பட்டு வருகிறது. துபாயிலிருந்து 188 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று பகல் 12:30 மணியளவில் மதுரை விமான நிலையம் அடைந்தது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து 192 பயணிகளுடன் மீண்டும் துபாய் புறப்பட்டு சென்றது. இதில் விமானத்தின் அதிக எடை காரணமாக 92 பயணிகளின் உடமைகள் மட்டும் விமானத்தில் ஏற்றப்பட்டது. மீதமுள்ள 100 பயணிகளின் உடமைகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக 100 பயணிகளின் உடமைகளை மதுரை விமான நிலையத்திலையே விட்டு செல்லப்பட்டது. இந்த தகவல் விமானத்தில் ஏறிய பிறகு பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். துபாயில் இருந்து வெளியே செல்ல பணம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மற்ற உடமைகளில் இருப்பதாகவும், நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருப்பதால் உடமைகளுக்காக காத்திருக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து 100 பயணிகளின் உடைமைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டு செல்லப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளின் உடமைகளை ஸ்பைஸ் ஜெட் நிறுவனமே பத்திரமாக துபாய் சென்ற பயணிகளின் உடைமைகளை வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பாரம் தாங்காமல் பயணிகளின் உடைமைகளை விட்டுச் சென்ற விமானம்
