• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

May 1, 2024

நற்றிணைப்பாடல் 368:

பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி,
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி,
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய
பசலை பாய்தரு நுதலும், நோக்கி,
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி,
வெய்ய உயிர்த்தனள் யாயே
ஐய! – அஞ்சினம், அளியம் யாமே!

பாடியவர்: கபிலர் திணை: குறிஞ்சி

பொருள்:

ஐயனே! பெரிய புனத்திலுள்ள தினைக்கதிர்களைக் கொய்து கொண்டு செல்லுகின்ற சிறிய கிளிகளை வெருட்டி; கரிய அடியையுடைய வேங்கை மரத்திலே தொடுத்த கயிற்றூசலில் ஏறி ஆடிப் பக்கம் உயர்ந்த அல்குலுக்குத் தழையுடை அணிந்து; நும்முடனே அருவியாடி விளையாட்டு அயர்ந்தேமாய் வருதலினுங்காட்டில்; இனியதொரு காரியமுளதாகுமோ? நெறிப்பமைந்த கருமை முதிர்ந்திருந்த கூந்தலில் நறுமணங் கமழ்தலைக்கொண்ட நல்ல புது நாற்றத்தையும்; பசலை பரவிய சிறிய நெற்றியையும் நோக்கி; பயனின்றிச் சிதைந்த உள்ளத்தையுடையளாய் எம் அன்னை; பிறிதொன்றனைச் சுட்டி நின்றாள் போல வெய்யவாகப் பெருமூச்செறிந்து வெகுளா நின்றனள்; அதனால் யாம் இல்வயிற் செறிக்கப்பட்டுப் பிறரால் இரங்கத்தக்க தன்மையேமாய் அஞ்சாநின்றேம்.