• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி
மோசடி வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது..!

Byகுமார்

Nov 8, 2021

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி – பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவிடம், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரை சேர்ந்த சக்திவேல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகார் தெரிவித்து இருந்தார். அதில், தான் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் சூப்பிரண்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். எனது மகன் மற்றும் உறவினர்களுக்கு வேலை தேடி வந்த நிலையில், மதுரை காமராஜர் சாலை வடிவேல் நகரைச் சேர்ந்த சங்கர் (வயது 52), நாகமலை புதுக்கோட்டை பார்த்தசாரதி ஆகியோர் என்னை தொடர்பு கொண்டனர். நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் பார்த்தசாரதியும் பணிபுரிந்து வருகிறார். எங்களுக்கு துணை வேந்தர் அலுவலக வட்டாரத்தில் அதிகாரிகள் பலரை தெரியும்.

பல்கலைக் கழகத்தில் கிளார்க், டைப்பிஸ்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. நீங்கள் பணம் கொடுத்தால் உங்களது மகன் மற்றும் உறவினர்களுக்கு வேலை வாங்கி தருகிறோம்“ என்று ஆசைவார்த்தை கூறினர். இதனை நம்பி நான் பணத்துடன் சங்கர், பார்த்தசாரதி ஆகியோரை மாவட்ட கோர்ட்டு அருகே சந்தித்தேன். அப்போது சக்திவேலிடம் ரூ.13 லட்சத்து 90 ஆயிரத்தை கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் சங்கரும், பார்த்தசாரதியும் பணத்தை தராமல் இழுத்தடித்தனர் என சக்திவேல் புகார் தெரிவித்து இருந்தார்.

மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் மதுரை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் ராஜசேகர், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமார் மேற்பார்வையில், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். அதில், காமராஜர் பல்கலைக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்த பல்கலைக்கழக ஊழியர் சங்கரை போலீசார் கைது செய்தனர்.

காமராஜர் பல்கலைக் கழகத்தில் பார்த்தசாரதி சில மாதங்களுக்கு முன்பு வரை வேலை பார்த்தார். அவரை பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்காலிக பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.