• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக அமுதா ஐஏஎஸ்

Byமதி

Nov 7, 2021

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா ஐஏஎஸ் அண்மையில் தமிழ்நாடு மாநில பணிக்கு திரும்பினார். இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக அவரை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு.

1994ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அமுதா மதுரையை சேர்ந்தவர். கடலூரில் துணை ஆட்சியராக பணியை தொடங்கிய இவர் தருமபுரி ஆட்சியர், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர் சென்னை பெருவெள்ள பாதிப்புகளை சீர்செய்யும் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றினார்.

தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்திலும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்திலும் திறம்பட பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா. இரு ஆட்சியிலும் தன்னுடைய சிறப்பான நிர்வாகத் திறமையால் பெயர் பெற்ற அமுதா அந்த தலைவர்களின் இறுதிச் சடங்குகளிலும் தன் பங்கை செய்தார்.

ஜெயலலிதா, கருணாநிதி என்ற பெரும் அரசியல் தலைவர்களின் இறுதிச் சடங்களை நிர்வகித்து எந்த பிரச்னையும் இல்லாமல் செய்து முடித்தவர் அமுதா ஐஏஎஸ். குறிப்பாக திமுகவின் அப்போதைய தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கு மெரினாவில் நடைபெறுவதில் சிக்கல் எழுந்திருந்தது. சட்டப்போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே மெரினாவில் தான் என முடிவானது. அப்போது அதிரடியாக பணியாற்றி எந்த பிரச்னையும் இல்லாமல் இறுதிச்சடங்கை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரியாக செய்து முடித்தவர் அமுதா. பல பரபரப்புகளுக்கு நடுவே தன் கையால் ஒருபிடி மண்ணை கருணாநிதி சமாதியில் போட்டு நெகிழச்செய்தார்.

கருணாநிதி இறுதிச் சடங்கில் சுறுசுறுப்பாக இயங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்த அமுதா ஐஏஎஸ் தான், முக்கியப் பிரமுகர்கள், தலைவர்கள் பங்கேற்ற ஏபிஜே அப்துல்கலாமின் இறுதிச் சடங்கையும் சரிவர செய்து முடித்தவர்.

சென்னை வெள்ளத்தின் போது அதிரடியாக களம் இறங்கி பல ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றியவர் அமுதா ஐஏஎஸ். வீடுகளில் காஞ்சிபுரம் மணிமங்கலத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்களையும், குழந்தைகளையும் நேரடியாக களத்தில் இறங்கி மீட்டு பலரது பாராட்டையும் பெற்றார்.

முன்னதாக அவர் பிரதம மந்திரி அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக இருந்த கோபால் ஐஏஎஸ் போக்குவரத்து துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக அமுதா ஐஏஎஸ் அந்த பணியை கவனிக்க உள்ளார்.