• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு : பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சம்

அரசு தொடக்கப் பள்ளி அருகே செயல்படும் தார் மற்றும் கிரஸ்சர் கலவை உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் கழிவு மற்றும் புகையால் மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்படுவதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள பூப்பாண்டியபுரம் கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 80 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் அருகில் நெடுஞ்சாலை பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான ஜல்லி மற்றும் தார் கலவை தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியாகும் கரும்புகை காற்றில் கலந்து வருவதால் இதை சுவாசிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதார கேடு உருவாகும் நிலை உள்ளது. இதுகுறித்து பூப்பாண்டியபுரம் கிராம மக்கள் கூறும்போது, இந்த தார் உற்பத்தி நிலையத்தை சுற்றி பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ளன. தற்போது பனைத்தொழில் சீசன் துவக்கியுள்ளது. இந்த நிலையில் இந்த தார்க்கலவை உற்பத்தி நிலையத்திலிருந்து காற்றுடன் கலந்து பரவும் கரும்புகை பதனீருடன் கலந்து விடுவதால், கருப்பட்டியிலும் அதன் தாக்கம் இருப்பதால் கருப்பட்டி பயன்படுத்துவோருக்கு கேன்சர் உள்ளிட்ட நோய்த்தொற்று பரவும் நிலையும் உள்ளது. எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அருகில் செயல்படும் தார்க்கலவை உற்பத்தி நிலையத்திலிருந்து வெளிவரும் கரும்புகை காற்றில் கலந்து வருவதால் அதை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதுடன், இருமல், சளியுடன் கரிய நிறம் ரத்தத்துடன் கலந்து வருகிறது. எனவே பொது சுகாதாருத்துக்கு கேடு விளைவிக்கும் இந்த தனியார் ஆலையை மூடும்வரை எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றனர்.

சம்பவம் அறிந்து கடலாடி தாசில்தார் ரெங்கராஜ், வட்டார கல்வி அலுவலர் ருக்மணி தேவி, சாயல்குடி காவல் ஆய்வாளர் முகமது இர்ஷாத், சார்பு ஆய்வாளர் சல்மோன் மற்றும் சிறப்பு நுண்பிரிவு காவலர் மாடசாமி ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதித்து கலைந்து சென்றனர்.