• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புத்தூர் மலை உச்சியில் மலைராமன் கோவிலை வழிபட செல்ல வனத்துறையினர் தடை..,

ByP.Thangapandi

Feb 13, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை உச்சியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மலைராமன் கோவில்., இந்த கோவிலை மலையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு செய்து வரும் சூழலில், மலை மீது ஏறி செல்ல படிக்கட்டுகள், தண்ணீர் வசதி, மின்சார வசதி என பல்வேறு வசதிகளையும் தரைப் பகுதியிலிருந்து மலை உச்சி வரை அமைத்து செவ்வாய், வெள்ளி மற்றும் மாத சிவராத்திரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தினங்களிலும் மலை மீது ஏறி வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த மலை வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாக கூறி, மலை மீது ஏறி மலைராமன் கோவிலை வழிபடவும், கோவிலுக்கு செல்லும் பாதைகளை சீரமைக்க கூடாது என வனத்துறையினர் தடை விதிப்பதாகவும், மீறி மலை மீது ஏறி வழிபாடு செய்தால் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மிரட்டி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி, இன்று உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் வேப்பனூத்து, கள்ளபட்டி, முத்தையன்பட்டி, மேட்டுப்பட்டி, வகுரணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மலை மீதுள்ள மலைராமன் கோவிலில் வழிபாடு நடத்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கும் வனத்துறை மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர். மேலும் மலையில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கவில்லை எனில் அனைத்து கிராம மக்களையும் திரட்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக கிராம மக்கள் எச்சரிக்கையும் விடுத்தனர்.