• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னிந்திய தென்னை திருவிழா’ திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்

ByKalamegam Viswanathan

Jan 28, 2024

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பல்லடத்தில் இன்று நடைபெற்ற ‘தென்னிந்திய தென்னை திருவிழா’வில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அவர்கள் குத்து விளக்கேற்றி இத்திருவிழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் மேயர் அவர்கள் பேசுகையில், “தமிழ்நாட்டின் முன்னோடி மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சியை மாற்றுவதற்காக ஏராளமான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதில் முத்தாய்ப்பாக திருப்பூரை பசுமை மாநகராட்சியாக மற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் விவசாயத்தின் கஷ்ட, நஷ்டங்கள் எனக்கு தெரியும். ஒரு மேயராக நான் உங்களுக்கும் (விவசாயிகளுக்கும்) அரசிற்கும் ஒரு பாலமாக இருந்து உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்.” என்றார்.

தமிழக உழவர் நல சங்கத்தின் தலைவர் கு. செல்லமுத்து அவர்கள் பேசுகையில், “தேசத்தின் வளர்ச்சிக்கு தொழில்களை காப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் நம்முடைய தாய் மண்ணை காப்பது. இந்தியாவில் எவ்வளவோ அமைப்புகள் இருந்தாலும் சத்குருவின் ஈஷா அமைப்பு தான் ‘மண் காப்போம்’ என்ற பெயரில் மண்ணை காக்கும் பணியில் உலகளவின் செய்து வருகிறது. கள்ளிமந்தையம் என்னும் என்னுடைய சிறிய ஊரில் மட்டும் ஆண்டுக்கு 10 கோடி அளவிற்கு ரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்தே நாம் நம் மண்ணின் வளத்தை எந்தளவிற்கு அழித்து வருகிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.

பொதுவாக, தென்னை விவசாயத்தை பொறுத்தவரை வியாபாரிகளும் இடைதரகர்களும் தான் அதிக லாபம் பெறுகிறார்கள். இந்த நிலையை மாற்றி விவசாயிகளும் அதிக லாபம் பெறுவது எப்படி என தெரிந்து கொள்ள ஈஷாவின் இந்த நிகழ்ச்சி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
அரசாங்கம் வெளிநாட்டில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்து மானிய விலையில் மக்களுக்கு விநியோகிக்கிறது. அதேபோல், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய் எண்ணெயையும் அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்” என்றார்.

வனம் இந்தியா அறக்கட்டளைச் சேர்ந்த சுந்தரராஜன் அவர்கள் பேசுகையில், “தென்னை விவசாயிகள் மதிப்பு கூட்டி விற்றால் தான் லாபம் பெற முடியும். தேங்காய் எண்ணெயில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எம்.சி.டி எண்ணெய் காக்காய் வலிப்பு, ஞாபக மறதி, செரிமான பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும் என கண்டறிந்துள்ளார்கள்” என்றார்.

தனது ஆராய்ச்சி பணிக்காக பாரத குடியரசு தலைவரிடம் இருந்து விருது பெற்றுள்ள திரு. விவேகானந்தன் அவர்கள் இவ்விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர்கள் பேசுகையில், “வீணாகும் தேங்காய் நீரில் இருந்து நான் கண்டுப்பிடித்துள்ள மருந்தின் மூலம் ஆராத சர்க்கரை நோய் புண்ணையும், தீக்காய புண்ணையும் சரி செய்ய முடியும். இம்மருந்து கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது” என்றார்.

முன்னதாக, மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் பேசுகையில், “மண் காப்போம் இயக்கம் என்ற பெயரில் தற்போது செயல்படும் இந்த இயக்கம் 2007-ம் ஆண்டு ஈஷா விவசாய இயக்கம் என்ற பெயரில் நம்மாழ்வாரின் வழிக்காட்டுதலுடன் சத்குருவால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும் நேரடி களப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

பல்லடத்தில் உள்ள விக்னேஷ் மஹாலில் நடைபெற்ற இத்திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் வறட்சியில் வளரும் அரசம்பட்டி தென்னை குறித்து முன்னோடி விவசாயி திரு. கென்னடியும், தென்னைக்குள் ஜாதிக் காய் சாகுபடி செய்வது குறித்து திரு. ரசூல் மொய்தீன் அவர்களும் சிறப்புரையாற்றினர். மேலும், ‘ஊடுபயிரும், உழவில்லா வேளாண்மையும்’ என்ற தலைப்பில் கர்நாடக விவசாயி திரு. சிவ நஞ்சய்யா பாலகாயி அவர்களும், ‘தென்னைக்குள் 10 வகை ஊடுப் பயிர்களுடன் மதிப்பு கூட்டல்’ என்ற தலைப்பில் கேரள விவசாயி திரு. ஸ்வப்னா ஜேம்ஸ் ஆலோசனைகள் வழங்கினர். மேலும், மத்திய அரசு நிறுவனங்களின் தென்னை விஞ்ஞானிகளும் பங்கேற்று பேசினர்.

இத்திருவிழாவின் ஒரு பகுதியாக தென்னை மற்றும் பிற விவசாய பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையும், எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் நடைபெற்றது.