• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆதியோகி ரத யாத்திரை கோவையில் கோலாகல தொடக்கம்..,

ByKalamegam Viswanathan

Jan 7, 2024

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று (ஜன 5) கோலாகலமாக தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார்.

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவரத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கோவையில் நேற்று தொடங்கியது.

ரத யாத்திரையை தொடங்கி வைத்த பின்னர் பேரூர் ஆதீனம் அவர்கள் பேசியதாவது “இறைவனை வழிபடுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் இறைவனை தேடி சென்று வணங்குவது, மற்றொன்று இறைவன் நமக்காக வீதிகள் தோறும் வந்து அருள் பாலிப்பது. அந்த வகையில் இந்த ஆதியோகி ரத யாத்திரை அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையோடு தமிழகமெங்கும் வலம் வர இருக்கிறது.” என்றார்.

மேலும் அவர் “சிவபெருமானுக்கு உரிய மஹாசிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த ரத யாத்திரை அமைய உள்ளது. சிவகண வாத்தியம், திருமுறை பன்னிசை, போற்றி வழிபாடு உள்ளிட்டவைகளோடு வலம் வர இருக்கிற ரத யாத்திரையை அடியார்கள் பயன்படுத்தி சிவனருள் பெற வேண்டும்” என கூறினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கைலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.

ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள் தமிழகம் முழுவதும் வலம் வர உள்ளன. இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் கி.மீ தூரம் வரை பயணிக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகிக்கு பூ, பழம் மற்றும் ஆரத்தி உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து சிறப்பாக வரவேற்பு அளிக்க உள்ளனர். ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின்னர் மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளது.

ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்களுக்கு தங்கள் ஊர்களிலேயே தரிசிப்பதற்கான வாய்ப்பாக இந்த ரத யாத்திரை அமைய உள்ளது.