• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சசிகலா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Byவிஷா

Dec 5, 2023

அதிமுகவில் இருந்து விகே சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, விகே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதன்பிறகு, அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூகம்பமாக வெடித்து ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டது.
கடந்த ஆண்டு ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே, தன்னை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து சசிகலா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதே வேளையில், அதிமுகவை துரோகிகள் கையில் இருந்து மீட்க வேண்டும் என டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
இந்த சூழலில், சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி சுப்பிரமணியன், செந்தில் குமார் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது வந்தது. அப்போது, இரு தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது, சசிகலாவை நீக்கியது செல்லாது. பதிவில் இருந்து நீக்குவதற்கு அதிகாரமில்லை. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதிகளுக்கு புறம்பாக கட்சிகளின் விதிகள் இஷ்டம்போல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 2017ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்ட விதிகளின்படி கூட்டப்படவில்லை என சசிகலா தரப்பில் கூறப்பட்டது.
இதுபோன்று அதிமுக தரப்பு கூறியதாவது, கட்சியின் உட்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக விதிகளின்படி தீர்மானம் நிறைவேற்றியதால் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்தனர். இதன்பின், அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணையில் அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என ஓபிஎஸ் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விகே சசிகலாவை நீக்கியது செல்லும் என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் சுப்பிரமணியன், செந்தில் குமார் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.